துபாயில் வசித்து வரும் இந்தியரான யாஷ் மன்சுக்பாய் மோராடியா என்பவர் யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
தொழில்முறை யோகா ஆசிரியரான இவர் விருச்சிக ஆசனத்தில் சுமார் 29 நிமிடம் 4 வினாடிகள் தொடர்ந்து நின்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இவரின் சாதனைக்கு கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய கின்னஸ் சாதனை 4 நிமிடம் 47 வினாடிகளாக இருந்தது.
மிகவும் கடினமான யோகாசனங்களில் ஒன்றான விருச்சிக ஆசனத்தில் கின்னஸ் சாதனை புரிய இவர் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றதாகக் கூறுகிறார்.
உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் இந்த ஆசனத்தை இது போல நீண்ட நேரம் செய்ய மன ஒருங்கிணைப்பும் தேவை என்று அவர் கூறியுள்ளார்.
21 வயதான யாஷ் தனது எட்டாவது வயதில் இருந்து யோகப் பயிற்சி செய்து வருகிறார்.
யோகா ஆசிரியருக்கான பயிற்சியை 2017ஆம் ஆண்டு முடித்த இவர், கடந்த ஐந்தாண்டுகளாக தொழில் முறை யோகா ஆசிரியராக உள்ளார்.
யோகா செய்வதன் மூலம் உடல் மட்டுமல்ல மன உறுதியும் அதிகரிக்கும் எனக் கூறும் இவர், யோக பயிற்சி மூலம் தெளிவான சிந்தனை திறன் உருவாகும் என்கிறார்.
யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை புரிவது தன் வாழ்நாள் கனவு எனக் கூறும் யாஷ், தான் கற்ற கலையானது வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் உதவும் என்கிறார்.