நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேர்வில் நான் ஜனாதிபதியானேன். நான் பாரிய பொருளாதார நெருக்கடி ஒரு புறத்திலும், மக்கள் எதிர்ப்பலைகள் மறுபக்கத்திலும் இருக்கும் தருணத்தில், எனினும் நாட்டுகாக இந்த சவாலை ஏற்க தீர்மானித்தேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
9 ஆவது நாடாளுமன்றத்தில் 3 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வரலாறு காணாத நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டாலேயே இதலிருந்து மீளமுடியும்.
நாட்டில் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியின் தீர்மானத்துக்கு இணங்கி செயற்படுவதல்ல. பொது கொள்கை வரம்பின்கீழ் அனைத்து கட்சிகளின் யோசனைகளுடன் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கமாகும்.
எரிபொருள் இறக்குமதி ஏனைய நாடுகளிடம் கடன்கள் கிடைக்கும் வரை எதிர்பார்க்காமல், ஏற்றுமதி வருமானங்கள், அந்நிய செலாவணிகள் மூலம் எரிபொருள் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டுடெழும் முயற்சியின் முதற்படியாக சர்வதேச நாணய நிதியத்துடன் 4 ஆண்டு திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. முதல் சுற்று பணிக்குழாம் மட்ட பேச்சுவார்த்தை மிக விரைவில் சாதமாக முடிவுறுத்துவது எமது எதிர்பார்ப்பு.
ஏற்றுமதியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மீண்டும் தெற்காசியாவின் நெற்களஞ்சியமாக மாற்றப்படும்.
சுற்றுலா துறையை மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படவிருந்த இலகு தொடருந்து சேவை மற்றும் துறைமுக அபிவிருத்தி என்பன போலி பிரசாரங்களால் இல்லாமல் செய்யப்பட்டது. இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 3 பில்லியன் அமெரிக்க டொலர் இல்லாது போனது.
எதிர்வரும் 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதார கொள்கையொன்றை வகுப்போம். 2026 ஆம் ஆண்டாகும் போது பலமிக்கதொரு பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்.
அரச தலையீடு இன்றி செயற்படும் மக்களவை ஒன்று அமைக்கப்படும் என்றார்.
உரையின் நிறைவையடுத்து, நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.
கொள்கை பிரகடன உரையின் முழுவடிவம் இங்கே