நல்லபடியாக ஜாதகம் பார்த்தும், நல்ல நேரத்தில் திருமணம் செய்தும் ஏன் சில திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று சிலர் கேட்கிறார்கள்.
ஜாதகம் பார்த்து திருமணம் செய்தும் விவாகரத்து ஆகிறது என்றால் ஜாதகம் தவறானதா? இதற்கு என்ன காரணம்? என பல கேள்விகள் உண்டு.
ஒருமுறை ஜாதகம் எழுதிவிட்டால் அது சரி என்று நாம் நம்பிவிடுகிறோம். அதில் சில தவறுகள் இருக்கவும் வாய்ப்புள்ளன. இன்றைக்கு நாம் பார்க்கும் ஜாதகங்களில் 30-40 சதவிகித ஜாதகங்கள் தவறாகவே உள்ளன.
நேரம் சரியாக குறிப்பிடப்படாததும், ஜாதகம் எழுதும்போது ஏற்படும் சில தவறுகளும் இதற்கு காரணம். சில ஜாதகங்கள் சரியாக எழுதப்பட்டாலும் சொல்லப்பட்ட நேரம் தவறாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
குழந்தை பிறந்த நேரம் என்று மருத்துவர்கள் கூறும் நேரத்தை வைத்து நாம் ஜாதகம் எழுதுகிறோம். ஆனால், அதிலும் சில நேரங்களில் சிக்கல் இருக்கிறது.

ஒரு லக்கினம் இரண்டு மணிநேர கால அளவு கொண்டது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை லக்கினம் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு 12 மணி முதல் 2 மணிவரை ஒரு லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குழந்தை 11.58க்கு பிறந்திருக்கும். ஆனால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வைத்தியர் வெளியே வந்து குழந்தை 12.05க்கு பிறந்தது என எழுதுகிறார் என்றால் அந்தக் குழந்தையின் லக்கினம் தவறாக மாறிவிடும். வைத்தியர் சொன்ன அந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதினால் ஜாதகமே தவறாகிவிடும்.
லக்கின சந்தியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை அதிகம் வருகிறது. இதனால் செவ்வாய் தோஷம், நாக தோஷம் மாதிரியான தோஷங்கள் எதுவும் இருக்கிறதா என்று அறுதியிட்டு கூறமுடியாத நிலையும் ஏற்படுகிறது.
சில ஜோதிடர்கள் கணினி மூலம் ஜாதகம் எழுதும்போது விவரங்களை சரியாக குறிப்பிட தவறிவிடுகின்றனர். அதனாலும் ஜாதகம் தவறிவிடுகிறது.
கையால் எழுதிய ஜாதகம், கணினியில் எழுதிய ஜாதகம் இரண்டையும் அருகருகே வைத்து பார்த்தால் எது சரியான ஜாதகம் என்று ஒரு தேர்ந்த ஜோதிடரால் கூறிவிட முடியும்.
திருமணம் சம்மந்தப்பட்ட எந்தச் செயல் செய்தாலும் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தை வணங்காமல் செய்யும் காரியங்கள் தவறாக போய்விடுகின்றன.
திருமண திகதி குறிப்பதிலும் சிலர் தவறுகள் செய்கிறார்கள். பெண்ணின் நட்சத்திரத்திற்கு நல்ல தாராபலன் உள்ள நட்சத்திரம் தேர்வு செய்யவேண்டும். ஆணின் நட்சத்திரத்திற்கு தாராபலன் சிறிது குறைவாக இருக்கலாம். பெண்தான் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதால் அன்றைய தினம் அந்தப் பெண்ணின் நட்சத்திரத்திற்கு மிகமிக உகந்த நாளாக இருக்கவேண்டும்.
பெரும்பாலானோர் பஞ்சாங்கத்தை பார்த்துவிட்டு மட்டுமே திருமண திகதியை குறித்துவிடுகிறார்கள்.
எனவே நல்ல நேரம், நல்ல நட்சத்திரம் பார்த்து திகதி குறித்தால் திருமண வாழ்க்கையில் தவறுகள் வரவே வாய்ப்பு இருக்காது என்கிறது ஜோதிடம்.