வவுனியாவிலுள்ள பாஸ்போட் அலுவலகம் ஊடாக இன்றைய தினம் ஒரேநாள் சேவையில் பாஸ்போட் எடுத்தேன். எனது அவதானிப்புகளும் கேட்டறிந்த தகவல்களும்.
01. நாளைய தினம் 11-05-2023 முதல் புதிய நடைமுறை.
ஒரே நாள் சேவைக்கு 2023 மே 11 முதல் 15 ஆம் திகதி வரையில் கியூ முறைமை இல்லை. ஏற்கனவே ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்து முற்பதிவு செய்தோருக்கு மட்டுமே பாஸ்போட் வழங்கப்படும்.
02. நாளை முதல் 11 -05-2023 முதல் 5000 ரூபா கட்டணத்துடன் சாதாரண சேவை மூலமாக வழங்கப்படும் பாஸ்போட்டுக்கு மட்டுமே கியூ முறை. ஒரு நாளில் 200 பேர் வரையானோருக்கு விண்ணப்பம் ஏற்கப்படலாமென்று கூறினார்கள். கியூவில் முதல் வருவோருக்கு முதல். இதற்குரிய போட்டோ ஏற்கனவே ஒன்லைன் அனுமதி பெற்ற ஸ்ரூடியோ மூலமாக எடுத்துப் பதிவு செய்து 03 மாதத்துக்கு உட்பட்ட திகதி உடையதாக இருத்தல் கட்டாயம்.
03. பாஸ்போட் படிவம், போட்டோ பிறின்ற், பிறப்புச்சான்றிதழ் அதன் போட்டோ பிரதி, தேசிய அடையாள அட்டை அதன் போட்டோ பிரதி, காலாவதியான பாஸ்போட் அதில் உங்கள் போட்டோ உள்ள பக்கத்தின் போட்டோ பிரதி, பெண்களாயின் விவாகப் பதிவுச் சான்றிதழ் அதன் போட்டோ பிரதி ஆகியவற்றை வழமை போலச் சமர்ப்பிக்க வேண்டும்.
முதன் முதலாகப் பாஸ்போட் பெறுபவராயின் பழைய பாஸ்போட் தவிர ஏனைய ஆவணங்கள் வழமை போலவே.
சான்றிதழ்கள் 06 மாத காலத்திற்கு உட்பட்டவை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவை எதுவுமே தேவையில்லை.
04. பாஸ்போட்டைத் தொலைத்தவர்கள் அதன் இலக்கத்தையும் குறிப்பிட்டுச் செய்த பொலிஸ் முறைப்பாட்டின் மூலப்பிரதி, போட்டோப் பிரதி ஆகியவற்றை இணைத்தல் கட்டாயமானது. தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும். ரூபா 50 000 வருமென நினைக்கிறேன்.

05. சிறு பிள்ளைகளுக்குப் பாஸ்போட் எடுப்பதாயின் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டு படிவத்தைப் பெற்றோர் நிரப்புதல் வேண்டும். விண்ணப்பதாரியின் கையொப்பம் என்ற கூட்டில் தாய் அல்லது தந்தை கையொப்பம் இடல் வேண்டும். தாய்,தந்தை ஆகிய இருவரும் நேரடியாகச் சமூகமளித்து ஆங்கில மொழியிலான ஒரு வெளிப்படுத்துகைப் படிவத்தினைத் தாய்,தந்தையர் இருவரும் தனித்தனியாக நிரப்பிக் கையொப்பமிட்டு ஒப்படைத்தல் வேண்டும். சமாதன நீதிவான் ஒப்பம் தேவையில்லை.
இந்த வெளிப்படுத்துகைப் படிவம் அருகிலுள்ள போட்டோக் கொப்பிக் கடையில் வாங்கலாம்.
06. சிறுபிள்ளைகளுக்குரிய பாஸ்போட்டுக்கும் ஒரே நாள் சேவைக்கு 20 000 ரூபா தான் கட்டணம் அறவிடுகின்றனர்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள், அரபு நாடுகளுக்குச் செல்லும் நோக்கத்துடன் பாஸ்போட் பெறுவதாயின் அதனைக் கூறினால் 03 வருடத்திற்குச் செல்லுபடியாகுமெனப் பாஸ்போட்டை ரூபா 9000 பெற்றுத் தருவார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் இதர வளர்ந்த நாடுகளாயின் 10 வருடத்திற்கெனக் கட்டாயம் எடுத்தல் வேண்டும். எடுத்து 03 வருடம் கழிந்தால் பிள்ளையின் தோற்றம் மாறத் திரும்பவும் பாஸ்போட் எடுக்க வேண்டும்.
07. வவுனியா அலுவலகத்தில் நேற்றுப் பலநூறு விண்ணப்பதாரிகள் திரண்டு வந்து ஒன்லைன் முறை இல்லை.வரிசை முறைதான என நின்று கலவரப்படுத்தியதால் அவர்களுக்கு ரோக்கன் கொடுத்தார்கள். அதனால் அவர்களை இன்று ஒரேநாள் சேவைக்கு அனுமதித்தார்கள். விரும்பியவர்களுக்குச் சாதாரண சேவைக்கும் அனுமதித்தார்கள்.
வழமையாக மதியம் 01 மணியுடன் விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்துவார்கள்.
ஆனால் இன்று மாலை 4 மணி வரையில் நேற்று ரோக்கன் பெற்றவர்களுக்கும் இன்று புதிதாக வந்தோருக்கும் விசேட அனுமதி கொடுத்து விண்ணப்பங்களை ஏற்றார்கள்.
08.பாஸ்போட் ஒன்று காலாவதியாகும் திகதிக்கு ஆறு மாதம் முன்பதாகப் புதுப்பிக்க முடியும்.
முக்கிய குறிப்பு- விசயத்தை முழுமையாக எழுதி விட்டதாக நம்புகிறேன். முகநூல் உட்செய்திப் பெட்டியூடாக வர வேண்டாம். ஒவ்வொருவராகப் பதில் தர முடியாமைக்கு வருந்துகிறேன்.
வேதநாயகம் தபேந்திரன்
11 மே 2023
20 மணி 35 நிமிடம்.