Sunday, October 1, 2023
Homeஇந்தியாஇந்தியாவில் தொடருந்து மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

இந்தியாவில் தொடருந்து மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தொடருந்து மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த அனர்த்தம் இன்று (23.08.2023) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மிசோரம் மாநிலம் – சைராங் பகுதி அருகே தொடருந்து மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தலைநகர் ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 104 அடி உயரத்தில் இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வழக்கம்போல இன்றும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கட்டுமான பணியில் சுமார் 35 முதல் 40 தொழிலாளர்கள்  ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் கட்டப்பட்டு வந்த  தொடருந்து மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டுடிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 17 தொழிலாளர்கள் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்றும் இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்ததா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2  இலட்சம் இந்திய ரூபா வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இந்திய ரூபாவும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments