திருக்கணித பஞ்சாங்க படி இன்று சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்.
மேஷ ராசி நண்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களின்படி ஏழரை சனி ஆரம்பமாவதால் கடன் கொடுப்பதை முற்றாக தவிர்க்கவும், பணத்தை சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பிக்கவும், வேலையில், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சோம்பல், தாமதம் அதிகமாகும், யாரையும் அதிகம் நம்பிவிடாதீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும், மருத்துவ காப்புறுதி எடுத்துக்கொள்ளுங்கள், பொறுப்புகள் அதிகமாகும், இந்த ஆலோசனைகள் இப்போது ஏன் என்பது அடுத்த இரண்டரை ஆண்டுகளில் புரியும்.
இடப ராசி நண்பர்களே! எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் உங்களுக்கு 11ல் சனி பகவான் வருவதால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களில் பணத்தை சேமிக்க ஆரம்பிக்கவும்.
மிதுனம் பத்தில் சனிபகவான் கடுமையான உழைப்பிற்கு பலன் உண்டு, கர்மஸ்தானம் என்பதால் நெருங்கிய உறவுகளை இழக்காது பார்த்துக்கொள்ளவும். நீண்டகால எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
கடகம் அப்பாடா! இழப்புகளையும் துன்பங்களையும் வலிகளையும் மட்டுமே தந்த அட்டம சனி முடிவடைகிறது. பாக்கிய ஸ்தான சனி முயற்சிகளுக்கான உயர்வை தரப்போகின்றார். பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். உலகறிய ஊமைக்குத்து வாங்கிய பூசம் நட்சத்திரக்காரர்களின் காயங்களுக்கு மருந்திடும் நேரம்.
சிம்மம்ச னிப்பெயர்ச்சி பலன்களின்படி அட்டம சனி உங்களை பந்தாக்கி கால்ப்பந்து விளையாடிக் கொண்டிருப்பதால், நோய், வழக்கு, அன்புக்காக ஏங்குதல், வீண் மனஸ்தாபம், பிணக்கு, கெட்ட செய்தி என சனிபகவானை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். அவதானம். கடன் கொடுப்பதையும் வாங்குவதும் தவிர்க்க முயற்சி செய்யவும் ஆனால் அவ்வாறான சூழ்நிலைகள் அமையும். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை, மருத்துவ பரிசோதனை செய்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மன அமைதியை பேண வேண்டியதும் வார்த்தைகளில் நிதானமும் அவசியம்.
கன்னி சனிப்பெயர்ச்சி பலன்களின்படி 7ல் சனி காதல், நட்பு, கணவன் மனைவி உறவு என்பவற்றில் கருத்து வேறுபாடுகள் தோன்றாமலும் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படவும் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது, முயற்சிகள் தாமதமாகும், மந்தநிலை தொடரும். சுயமரியாதையை தூரமாக வைத்துவிட்டு கோபப்படாமலிருக்க பழகுவது பக்கவிளைவுகளை குறைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம் சனிப்பெயர்ச்சி பலன்களின்படி கெட்டவன் 6ல் மறைந்திட கிட்டிடும் ராஜயோகம் ஜெய சனி கடன் நோய் எதிரிகள் குறைவடைந்து நிம்மதியான காலமாகும். பதவி, வருமான உயர்வுகள் உண்டு, நினைத்ததை நடத்தி முன்னேறும் காலம்.
விருட்சிகம் பஞ்சம சனி
காரணமே தெரியாமல் அடி மேல் இடி வாங்கிக்கொண்டிருந்த உங்களுக்கு காதல், அதிஷ்டம் போன்ற நன்மைகளை தரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும். முன்னோர்கள் சார்ந்த வேண்டுதல்கள் இருப்பின் விரைந்து நிறைவேற்றவும்.
தனுசு அர்த்தாஷ்டம சனி பெரியளவு பாதிப்புகளை தராது. ஆனாலும் ஆசைப்பட வைத்து அதை கிடைக்க செய்யது அதே விடையத்திலேயே ஆபத்தையும் தரலாம், தொழில் சிறப்பு. வாகனம், பயணம், சொத்து, உடமைகள், தாயார் ஆரோக்கியம் போன்ற விடையங்களில் மிகுந்த சிரத்தை எடுக்கவும்.
மகரம் இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் ஏழரை வருடம் உங்களை பாடாய்ப்படுத்திய நீதிவேந்தன் தன் ப்ரக்டிக்கல் பாடம் முடித்து பாயை சுருட்டிக்கொண்டு விடைபெறுகிறார், மூன்றில் சனி படிப்படியான நன்மைகளை தரப்போகிறது. விட்டதுக்கு மேலால விடாமப் பிடியுங்கோ!!!
கும்பம் சகலவிதத்திலும் ஜென்ம சனி காலத்தில் துன்பங்களை கடந்துவந்த நீங்கள் இன்னும் இரண்டரை வருடம் பொறுமையை காத்தால் எதிர்காலம் வளமே! முன்பைவிட தீமைகள் குறைவு. குட்ட குட்ட குனிந்தபடி நிற்கும் நீங்கள் இந்த இரண்டாமிட சனி காலத்தில் தலையை மட்டும் நிமிர்த்தலாம். ஷ்பெஷலாக மிதி வாங்கிய சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இனி ஆறுதலடையலாம்.
மீனம் சனிப்பெயர்ச்சி பலன்களின்படி ஜென்ம சனி ஆரம்பம், வேலை இழப்பு, கடன் வாங்கும் நிலை, மேலதிகாரிகள் தொல்லை, நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், உறவுகள் பிரிவு, சண்டை சச்சரவுகள் என சனிபகவானை பனியனுக்குள் விட்டுக்கொண்டு அடுத்த இரண்டரை ஆண்டுகள் கண்ணீர் சிந்த போவதால் அனுதாபங்கள். உடற்பயிற்சி, கடும் உழைப்பு போன்றவை நன்மைகளை தரும். வாகனம் செலுத்துவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை, பெற்றோர், மருத்துவ நிலை கவலை தரலாம், பாரிய முதலீடுகளையும், வீண் விவாதங்களையும் முற்றாக தவிர்க்கவும். கோபப்படும் குணத்தை கோமாவில் வைப்பது நல்லது, வீழ்பழி கேட்க நேரிடும், மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்கவும். எதிர்பார்ப்புகள் தாமதமாகும்.
இவை இராசிகளுக்கான பொதுப்பலன்கள் மட்டுமே, அவரவர் பிறந்த நேரத்திலிருந்த கிரகநிலைகளின்படி தனிநபர் தசாபுத்தி, ஜாதக பலன்கள் மாறுபடும். வாக்கிய பஞ்சாங்க படி அடுத்த ஆண்டே சனிப்பெயர்ச்சி நிகழ்விறது. அவரவர் மற்றவர்களுக்கு கடந்த ஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்யும் நன்மை தீமைகளுக்கேற்பவே சனிபகவானின் பாவபுண்ணிய பாதிப்புகள் அமையும் என்பதால் அதிக நேர்மையானவர்கள் அதிகம் பயப்படவேண்டியதில்லை.